Monday, 11 September 2023

திராவிடக் கட்சிகளின் வரலாறு -- நூலறிமுகம்

 

நூல் அறிமுகம்:
இது தான் திராவிடக் கட்சிகளின் உண்மையான "வரலாறு"
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

             (ஆசிரியர்:  மூத்த பத்தரிகையாளர் கே.சி. லெட்சுமி நாராயணன்.  வெளியீடு:  எல்கேஎம் பப்ளிகேஷன், பழைய எண் 15/4 புதிய எண் 33/4, ராமநாதன் தெரு, தி.நகர், சென்னை 600017. விலை ரூ. 400/-)

              கவிஞர் கண்ணதாசன்,  திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து வெளியேறியதை வனவாசம் முடிந்தது என உருவகபடுத்தி வனவாசம் என்ற தலைப்பிலேயே தனது சுயசரிதையை எழுதினார்.  அது திராவிட இயக்கத்தோடான  அவருடைய தனி அனுபவம். அவருடைய பார்வை.

           இந்நூலோ திராவிட இயக்கம் இந்த மாநிலத்தை, மக்களை எப்படி பாதித்தது என்பதை எடுத்துரைக்கிறது.    

         1967 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை 53 ஆண்டுகளாக தமிழகத்தில் தி.மு.க மற்றும் அதிலிருந்து பிரிந்த அ.இ.அ. தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகள் தான் ஆளுங்கட்சிகளாக இருந்து வருகின்றன.  எழுதப்படாத இந்த இருகட்சி ஆட்சி முறையின் காரணமாக இந்த கட்சிகள் ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் இரண்டுமே செல்வாக்குடைய கட்சிகளாக இருக்கின்றன.   இதன் நீட்சியாக இவற்றின் தாய்க் கட்சியான தேர்தலில் போட்டியிடாத திராவிடர் கழகமும் செல்வாக்குடன் இருக்கிறது. 

           இந்த செல்வாக்கையும் நூறாண்டுகளாக கற்பிக்கப்பட்ட வரலாற்றையும் அக்கு வேறு ஆணிவேறாக அலசி ஆய்வு செய்கிறது இந்த நூல்.   700 பக்கங்களாலான இந்த நூலின் சாற்றை, ஐந்து சொற்களால் ஆன தலைப்பே சொல்லிவிடுகிறது   இது தான் திராவிடக் கட்சிகளின் உண்மையான 'வரலாறு'.  அதிலும் வரலாறு என்பது மேற்கோள் குறிக்குள் இடம் பெறுகிறது.

           இந்நூலாசரியர் மூத்த பத்திரிகையாளர் அமரர் கே. சி. லெட்சுமி நாராயணன், இதனை தமது 83 ஆம் வயதில் (2011 -12 ஆண்டில்)   எழுதியிருக்கிறார். அந்த வயதில் தன் உடல் நிலையும் சீராக இல்லாத காலகட்டத்தில் இந்நூலை எழுத வேண்டும் என்ற அவருடைய உறுதிப்பாடு வியக்க வைக்கிறது.  

           தி.மு.க தோற்றவிக்கப்பட்ட காலத்திலிருந்து  அண்ணாதுரை தன்னுடைய பேச்சாற்றலால்  அன்றைய இளைய தலைமுறையையே தன்வசப்படுத்தினார். இந்நூலாசிரியரும் அதற்கு விதிவிலக்கில்லை. அவரும் தி.மு.க. தொடக்க விழாக் கூட்டத்தை மழையில் நின்று கொண்டு அண்ணாதுரையின் சொற்பொழிவைக் கேட்டிருக்கிறார் (பக்கம் 146). கவிஞர் கண்ணதாசனும் அண்ணாதுரையின் பேச்சில் மயங்கியவர் தான்.  அவரைப் போலவே நூலாசிரியர் கே. சி. லெட்சுமி நாராயணனும் மாயையை உடைக்க இந்நூலை எழுதியிருக்கிறார்.

               திராவிடக் கட்சிகள் துணிந்து வரலாற்றைத் திரித்துக் கூற முயல்கின்றன.  

              பிரிவினை வாதக் கொள்கையை 1963 ஆம் ஆண்டில் அதிகாரபூர்வமாகக் கைவிட்டு விட்டாலும் அவர்கள் பிரிவினைவாதிகளை நேரடியாகவோ மறைமுகவாகவோ ஆதரித்து வருகின்றனர்.  

              இந்த நிலை தொடர்ந்தால் எதிர் காலத்தில் உண்மைகள் பொய்யாகிவிடும் பொய்மை உண்மையாகிவிடும்.   இது தமிழகத்திற்கு மட்டுமல்ல  இந்தியாவிற்கே பெரிய ஆபத்தை உண்டாக்கும்.  பொது மக்களுக்கு உண்மைகளை வரிசையாகச் சொல்லி இந்த பெரிய ஆபத்து விளையாமல் தடுக்க  வேண்டும் என்பதே தனது நோக்கம் என ஆசிரியர் உரையில் அவரே பதிவு செய்துள்ளார். (பக்கம் 13)  

            இது திரரவிடக் கட்சிகளின் வரலாறு என்ற போதும் திராவிடக் கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்ளும் கம்யூனிஸ்ட்டுகளிடம் கேள்வி எழுப்புவதும் நூலாசிரியரின் நோக்கங்களுள் ஒன்றாகும். (பக்கம் 18)

             நூலின் முன்னுரைப் பகுதியிலேயே அரசியல் கட்சிகள், பிரிவினை வாத எதிர்ப்பு தேசிய உணர்வு  எனும் கொள்கைகளால்  அடையாளம் காணப்படுகின்றன.  

           அ.இ.அ.தி.மு.கழகமும் திராவிடக் கட்சி என்றாலும் அக்கட்சியிடமோ அதன் நிறுவனர் எம்.ஜி. ஆர் அவர்களிடமோ அவருக்குப் பின் அக்கட்சிக்குத் தலைமையேற்ற ஜெயலலிதாவிடமோ --  திராவிடக் கட்சியின் பிரதான குணாம்சங்களான பிரிவினைவாதிகளை ஆதிரிக்கும் குணமோ இந்தியா ஓரே நாடு என்ற தேசிய உணர்வை ஏற்கத் தயங்கும் போக்கோ இல்லை.  அதைப் போல திராவிடக்கட்சிளின் தீய குணாம்சம் இல்லாத இன்னொரு கட்சி விஜயகாந்த்தின் தே.மு.தி.க என்பதும் குறிப்பிடபட்டுள்ளது.  

              இவற்றிற்கு மேலாக இக்கட்சிகள் தங்களின் பெயர்களில் திராவிட என்ற சொல்லை நீக்கி முறையே அனைத்திந்திய அண்ணா முன்னேற்றக் கழகம் என்றும் முற்போக்குத் தேசியக் கழகம் எனவும் பெயர் மாற்றிட வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

             திராவிட இயக்கம் என்பது திராவிடர் கழகத்தை முதன்மையாகக் கொண்டதாவும்  தி.க தேர்தலில் போட்டியிடாத கட்சி என்றும் தேர்தலில் போட்டியிட விரும்பியவர்கள் பிரிந்து வெளியேறி உருவாக்கியது தான் தி.மு.க  என்றும்  அதனின்று பிரிந்தது தான் அ.இ.அ.தி.மு.க என்பதாக வில்லங்கம் இல்லாத வரலாற்றை திராவிடக் கட்சிகள் தங்களின் பிரச்சார வலிமையினால் பொது மக்களிடையே நன்றாக நிறுவிவிட்டனர்.

          ஈ.வே.ரா. வின் திராவிடர் கழகத்திற்கு முன்னர் ஜஸ்டிஸ் கட்சி என்றொன்று இருந்ததையும் அதற்கும் முன்னர் தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம் என்றொன்று இருந்ததையும் அவர்களே கண்டும் காணாமல் விட்டுவிடுவார்கள்.    

          1944 ஆம் ஆண்டில் சேலத்தில் நடைபெற்ற ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டில் தான் திராவிடர் கழகம் என்ற பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. ஆனால் உள்ளபடியே இந்த இயக்கத்தின் வித்து 1916 ஆண்டிலேயே  தென்னிந்தியர் நலவுரிமைச் சங்கம் என்ற பெயரில் விதைக்கப்பட்டுவிட்டது, அதுவும் ஆங்கிலேயரின் விருப்பத்திற்கிணங்க காங்கிரசிற்கு எதிர் இயக்கமாக  தோற்றிவிக்கப்பட்டது.

          வடபுலத்தில் தேசிய காங்கிரஸ் மகாசபைக்கு எதிராக முஸ்லீக்கை தோற்றுவிப்பதிலே வெற்றி கண்டது போல, தென்புலத்தில் பிராமணர் அல்லாதார் கட்சியாக தென்னிந்தியர் நலவுரிமைச் சங்கத்தைத் தோற்றுவிப்பதிலே இந்திய வைஸ்ராயும், சென்னை மாகாணக் கவர்னரும் வெற்றி கண்டனார் என ம.பொ.சி எழுதியுள்ளார். (பக்கம் 75)
           
            இந்தியர்களைப் பிரித்து வைத்தால் தான் இந்தியாவை ஆள முடியும். என்பதற்காக பிரிட்டன் வகுத்தது தான் புகழ் பெற்ற பிரித்தாளும் சூழ்ச்சி.  இதற்கு உதவியவை ஆரியர் படையெடுப்பு, ஆரியர் திராவிடர் மோதல் போன்ற கருத்தியல்கள்.  ஆரியர் எனப்படுவோர் இந்தியா மீது படையெடுத்து வந்தவர்கள் என முதலில் கூறியவர் ஜெர்மன் அறிஞர் மாக்ஸ் முல்லர் தான் (1823-1900).  ஆனால் அவரே பின்னர் ஆரியர் இந்தியா மீது படையெடுத்து வந்தார்கள் என்ற கோட்பாடு ஆதாரமற்றது என அறிவித்துவிட்டார்.  ஆங்கிலேயர்கள் முல்லரே ஒப்புக் கொண்ட பிழையான கோட்பாட்டை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்கள், அவருடைய மறுப்பை மறைத்துவிட்டார்கள்.(பக் 416)
         
          ஆரியர் திராவிடர் மோதல் எனும் கற்பனைக் கோட்பாட்டைப் பிரச்சாரம் செய்வதற்கும்  ஆள் தேடிய போது அதில் விரும்பி ஆங்கிலேயரிடம் அடிமை பூண்டவர்கள் தான் தென்னியந்திய நலவுரிமைச் சங்கத்தினர், அவர்கள் வழிவந்த ஜஸ்டில் கட்சியினர், அப்பெயரை மாற்றிக் கொண்ட திராவிடர் கழகத்தினர்.(பக்கம் 414)  

            புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவாவும் ஈ.வே.ரா வின் சுயமரியாதை இயக்கத்திலிருந்தவர். அவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடின் காரணமாக கோவையில் தேசிய சுயமரியாதை மாநாடு நடத்தினார்.  அந்த மாநாட்டில் ஜீவா  ஈ.வே.ரா. விற்கு மக்கள் சுயமாியாதையோடு வாழ வேண்டும் என்ற விருப்பம் உண்மையில் கிடையாது. இந்தியா சுதந்திரம் அடையக் கூடாது என்பது தான் அவரது விருப்பம் என முழக்கமிட்டார்.  (பக்கம் 88)
         

           ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியைச் செயல்படுத்த தோற்றிவிக்கப்பட்ட இயக்கத்திற்கு இந்தியா சுதந்திரம் பெற்று ஆங்கிலேயர்களே வெளியேறிய பிறகு எப்படி இயங்க முடியும் ?   சளைக்காமல் இயங்கினார்கள், சுதந்திர தினத்தை துக்க தினம் என்றார்கள்  மேலும் சென்னை ராஜதானியை மட்டுமாவது பிரிட்டிஷாரின் நேரடி நிர்வாகத்தில் இருக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றி தங்களின் பிரிவினைவாத உறுதிப்பாட்டை நிலைநாட்டிக் கொண்டனர்.

கட்சிக்குள்ளும் போட்டி பூசல்கள் நிறைந்தேயிருந்தன.   ஈ.வே.ரா -- மணியம்மை பொருந்தாத் திருமணத்தில் தான் புயல் வெளியே தெரிந்தது.  ஈ.வே.ரா எந்த எதிர்ப்பிற்கும் சளைக்கவில்லை மேலும் திராவிடர் கழகத்தை மணியம்மையிடம் ஒப்படைக்கப் போவதாகவும் அதற்காகவே திருமணம் செய்து கொள்ளவதாகவும் அறிவித்தார். அண்ணா துரை தேர்தலில் போட்டியிட விரும்பியதால் அவர் தி.க வை விட்டு வெளியேறினார், பொருந்தாத் திருமணம் ஒரு காரணமாகியது என்று சொல்லப்பட்டது.  இவற்றிக்கு அப்பால்  ஈ.வே.ரா வின் சர்வாதிகாரமும் ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கிறது.  இதனை ஈ.வே.கி. சம்பத் போட்டுடைக்கிறார்.

              அண்ணாதுரையோடு 1949 ஆம் ஆண்டில் தி.க. விலிருந்து வெளியே வந்தவர் ஈ.வி.கே. சம்பத், பிறகு அவர், தி.மு.க விலிருந்தும் விலகி கவிஞர் கண்ணதாசனோடு சேர்ந்து தமிழ் தேசிய காங்கிரஸ் எனும் கட்சியை 1961 ஆம் ஆண்டில் தொடங்கினார்.  1961 இல் அந்தக் கட்சியின் தொடக்க விழாவில் திராவிடர் கழகத்தில் 1946 ஆம் ஆண்டிலேயே குமுறல் இருந்து என்று கூறியதோடு பெட்டி சாவியை கொடுத்ததாக அறிவித்துவிட்டு கொடுக்காமல் இருந்த ஈ.வே.ரா வும் அண்ணாதுரையும் அறிக்கைப் போர் நடத்தியது போன்றவற்றை ஈ.வி.கே. சம்பத் அம்பலப்படுத்தினார் (பக்கம் 119 -121).  இதே போல ஈ.வே.ரா காலமான பிறகும் ஒரு சொத்துச் சண்டை நடந்திருக்கிறது, அதனை வே. ஆனைமுத்து மிக மிக தெளிவாக ஆதாரங்களோடு அம்பலப்படுத்துகிறார் (பக்கம்   297 -298)
                            
             திராவிட இயக்கத்தின் பயணம் குறைந்தபட்சம் மூன்று முரண்பாடுகளோடு தான் தொடர்ந்தது. 1. மாக்ஸ் முல்லரே தனது கோட்பாட்டை தவறு என்ற போதும் இவர்கள் அதைக் கண்டு கொள்ளவில்லை 2  ஆரியர்கள் கைபர் கணவாய் வழியாக வந்தவர்கள் என்றால் அவர்கள் அந்நியர்கள் அதன்படி நவீன இந்தியா முழுவதுமே திராவிட பூமியாக இருந்திருக்க வேண்டும்,  திராவிட இயக்கத்தினரோ திராவிட பூமியை தென்னிந்தியாவோடு சுருக்கிக் கொண்டனர் -- சில தருணங்கள் சகல வடபுலத்தாரையும் ஆரியர்கள் என்றனர். 3. தமிழிலிலிருந்து தோன்றிய மலையாளம் கன்னடம் தெலுங்கு பேசும் பூமிகளை திராவிட நாடு என்றார்கள்.  ஆனால் திராவிட இயக்கத்தினரின் திராவிட இனம் மொழி மண் கருத்தியல்களை எதுவும் தமிழ்நாட்டிற்கு அப்பால் கண்டு கொள்ளப்படவே இல்லை

         இந்த முரண்பாடுகளுக்கு அப்பாலும் குறைந்தபட்சம் இருபெரும் குழப்பங்களும் ஆண்டாண்டு காலாமாகத் தொடர்கின்றன.  தமிழ் தான் மனித குலத்தின் மூத்த மொழி.  தமிழிலிருந்து தோன்றிய மொழிகள் தான் மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகள்.  இந்த மொழிகளை எல்லாம் தமிழ் மொழிக் குடும்பம் என்று தானே சொல்ல வேண்டும்?  ஏன் திராவிட மொழிக் குடும்பம் என்கிறார்கள்? திராவிடம் என்ற சொல்லே சமஸ்கிருதச் சொல் என்றும் கூறுகிறார்கள்.  திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தை ஆய்வு செய்த கால்டுவெல் அசாமில் ஒடிசாவில் பேச்சு வழக்கில் உள்ள சிலமொழிகளையெல்லாம் திராவிட மொழி என்கிறார்.  

      இன்றும் கூடங்குளம், முல்லைப் பெரியாறு, ஈழம், மீனவர் பிரச்சனை .....எல்லாவற்றிலும் திராவிடக் கட்சிகளின் தேச நல எதிர்ப்புத் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. (பக்கம் 26). திராவிடக் கட்சிகள் தமிழகத்தில் தேச அடையாளங்களை ஒவ்வொன்றாக அழித்து வருகின்றன  (பக்கம் 31) 

     1951 ஆம் ஆண்டிலேயே திராவிட இயக்க எதிர்ப்பு மாநாட்டை ம.பொ.சி நடத்தியிருக்கிறார்.  கண்ணதாசனின் வனவாசத்திலிருந்து சில பக்கங்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.  கண்ணதாசனின் அண்ணாதுரைக்கு நூறு கேள்விகள் என்ற புத்தகமும் முழுமையாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது.  இந்த நூலாசிரியரே 1961 ஆம் ஆண்டில் அண்ணாதுரைக்கு பத்துக் கேள்விகள் என்ற நூல் இந்தப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது. கம்யூனிஸட் தோழர் மாஜினியின் கருந்திரை கிழிகின்றது என்ற மிக நேர்த்தியான ஆய்வு நூல் முழுமையாக சேர்க்கப்பட்டிருக்கிறது. இன்னும் பலர் தட்டிக் கேட்டிருக்கிறார்கள்.  பிறகு எப்படி திராவிடக் கட்சிகளின் செல்வாக்குத் தொடர்கிறது.

          திராவிடர் கழகமும் தி.மு.க வும் ஆக்ரோஷமாக மோதிக் கொண்ட காலத்திலேயே ஈ.வே.ரா.  காமராஜருக்கு ஆதரவு கொடுத்தார்.  ஆனால் காமராஜரின் முன்னிலைலேயே அவருடைய மேடையிலேயே காங்கிரசை கடுமையாக விமர்சித்தார். அது காங்கிரஸ் தொண்டர்களிடையே அதிருப்பதியை ஏற்படுத்தியது.  1967 இல் தி.மு.க உள்ளிட்ட பல கட்சிகள் இராஜாஜி தலைமையில் தேர்தலை எதிர் கொண்டன. ஈ.வே.ரோ எதிரணியான காங்கிரசை ஆதரித்தார்.  ஆனால் தேர்தலில் அண்ணா வெற்றி பெற்றதும். ஈ.வே.ரா பக்கம்  சாய்ந்து விட்டார்.  ஈ.வே.ரா வும்  1952 ஆம் ஆண்டிலிருந்து ஆதரித்த காங்கிரசை சட்டென்று கை கழுவி விட்டார். தமிழக அரசியலில் காங்கிரசும் தி.மு.க வும் இரு துருவங்களாக இருந்த காலத்தில் காங்கிரசை திராவிடக் கட்சிகள் இவ்வாறு பலவீனப்படுத்தின.  இது ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியின் புதிய வடிவம் தானே?

           தி.மு.க விலிருந்து.1972 இல்  அ.இ.அ.தி.மு.க பிரிந்த பிறகு   இரு துருவக் கட்சிகளாகின.  மற்ற கட்சிகளும் ஏதேனும் ஒரு கட்சியோடு கூட்டணி அமைத்துத் தான் தேர்தலை எதிர்கொள்வது என்பது வழக்கமாகிவிட்டது.   எந்தக் கூட்டணி வென்றாலும் அது ஒரு திராவிடக் கட்சியின் வெற்றியாயிற்று.   

          இந்த நூலை வாசிப்பவர்கள் திராவிடக் கட்சிகள் கட்டமைத்த மாயையிலிருந்து மீள்வார்கள்.  மீள்பவர்கள் மிகச் சிறந்த அரசியல் விமர்சகரான எழுத்தாளர் ஜெயகாந்தன் சொல்வதை ஏற்பார்கள்

        தமிழ்நாட்டு அரசியலிலிருந்து திராவிட சித்தாந்தம் ஒதுங்க வேண்டும்.  அது தமிழ்நாட்டை ஆளுகிற சக்தியாக இருப்பது விபரீதம்.  (ஓம் சக்தி தீபாவளி மலர் 2005)  

நலந்தா செம்புலிங்கம்
Show quoted text