வெண்பாவில் தொடுத்த அந்தாதி மாலை
(திருக்குறள் தேனீ செயம்கொண்டான் எழுதிய அழகப்பர் அந்தாதி நூலிற்கு எனது அறிமுகவுரை)
நாள் தோறும் திருக்குறளைப் படித்துத் துயித்துப் பரப்புவதையே தன் வாழ்க்கையாக வரித்துக் கொண்டவர் தம்பி செயங்கொண்டான்.
இவர், ஆயிரமாயிரம் மாணவர் நெஞ்சங்களில் திருக்குறளை நாளும் விதைத்து வரும் நல்லாசிரியர். இவர் திருக்குறளின் பால் எவ்வளவு ஈடுபாடு கொண்டுள்ளாரோ அதே அளவு வள்ளல் அழகப்பர் மீதும் ஈடுபாடு கொண்டவர்.
கொடை விளக்கெனக் வ.சுப. மாணிக்னாரால் பாடப்பெற்ற வள்ளல் அழகப்பர் 1909 ஆண்டு தோன்றி 1957 ஆண்டு புகழுடம்பெய்தியவர். இந்நூலாசிரியர் செயங்கொண்டான் வள்ளல் அழகப்பர் மறைந்த பிறகு பிறந்த இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்தவர், இவர் அழகப்பரை நேரில் கண்ட தலைமுறையினரைப் போல புலமை உரிமை (POETIC LICENCE) எடுத்துப் பாடுகிறார்.
யாம் மெய்யாக் கண்டவற்று ளில்லை எனுமளவு
நாம்மெய்யாய் கண்டிட்ட நல்லவரைப் -- பாவடியில்
பாடுகின்ற போதின்பம் பாடுபுகழ் பெற்றிங்கே
ஊடாடும் அன்னார் ஒளி
(வெண்பா 13)
அழகப்பரை காரைக்குடியைக் கல்விக்குடியாக்கிய வள்ளல் எனக்கொண்டாடுவது பெருவழக்காகவுள்ளது. உண்மையில் அவருடைய கொடைப் பரப்போ காரைக்குடிக்கு அப்பாற்பட்டு மொழி மாநில தேசிய எல்லைகளைக் கடந்து விரிந்துள்ளது. இன்று அண்ணா பல்கலைக் கழகத்தின் முதன்மைக் கல்லூரியாக விளங்கும் அழகப்பா பொறியியற் கல்லூரியும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் பொறியியற் கல்லூரியும் 1943 -44 ஆண்டுகளில் அழகப்பரின் அளித்த கொடையாகும்.. உள்ளபடியை அந்த வள்ளலின் கடைக்கண் பார்வை காரைக்குடிக்கு 1947 ஆம் ஆண்டில் தான் கிடைத்தது.
உண்மையான ஒரு மாமனிதன் தான் உண்மையான ஒரு புலவனின் பாடுபொருளாக முடியும். புலவனுக்குத் தன் பாட்டுடைத் தலைவனைப் புகழந்தேத்துவது தான் இயல்பு. அத்தோடு வாசகனுக்கு ஒரு நோக்கத்தையும் செய்தியையும் சொன்னால் தான் புலவனும் பாட்டும் நிலைக்கும். இந்நூலாசிரியர் செயங்கொண்டான் வள்ளல் அழகப்பரின் வாழ்க்கையை நாம் ஏன் படிக்க வேண்டுமென்பதற்கு ஒரு காரணத்தையும் மிக மிகத் தெளிவாகச் சுட்டுகிறார்.
வலக்கை கொடுக்க வருமிடக்கை காணா
நலக்கொடையாய் வீடதனை நல்கும் -- அழகப்பர்
செல்வப் பயன்கண்டார் சீர்பெற்றார் தம்வாழ்வை
எல்லையாய் கொள்வோம் இனி
(வெண்பா 10)
வள்ளல் அழகப்பர் வெள்ளிக் கரண்டியுடன் பிறந்தவர் (born with a silver spoon) எனக் கூறத்தக்க வகையில் செல்வச் செழிப்புடன் பிறந்தவர். அவர் தம் கூர்த்தமதியினால் அச்செல்வத்தை மேலும் பெருக்கினார். அவருடைய கொடை வேகத்திற்கு ஈடுகொடுக்க அவரே மேலும் மேலும் உழைத்து ஈட்டி ஈந்து மகிழந்தார். அவருடைய தனி வாழ்க்கையில் பல சோகங்களையும் எதிர்கொண்டார். தொழில் துறையிலும் பல போட்டி பொறமைகளையும் எதிர்கொண்டார். தொழிலிலும் பல சவால்களைச் சந்தித்தார். தான் படும் துயரங்களைக் கண்டு தளாரது உழைத்து ஈட்டி கொடுது்து மகிழந்தார். இதனை நூலாசிரியர் 66 வது வெண்பாவில் மிக மிக அழகாகப் பதிவு செய்துள்ளார்.
தாம்பட்ட இன்னலைக் கண்டு தளராது
நாம்யார்க்கும் கல்வியினை நல்காக்கால் -- வேம்பென
வாழ்வு கசக்கும் வகைகூடாதென்றுழைத்தார்
ஆழ்கடல்சூழ் பாரில் அவர்
(வெண்பா 66)
இந்நூல் யாப்பு இலக்கணங்களில் தேர்ச்சி மிக்கவர்கள் இயற்றக் கூடிய வெண்பா யாப்பில் பூத்து அந்தாதி மாலையாக வள்ளல் அழகப்பருக்கு சூடப்பட்டுள்ளது. இதை இயற்றியவர் யாப்பு இலக்கணங்கள் மீறிப் பீரிட்ட புதுக் கவிதை இயக்கமான வானம்பாடி இயக்கத்திற்கும் பின் பிறந்தவர். வானம்பாடி இயக்கத்திற்கு பின்னர் தோன்றிய ஹைக் கூ தலைமுறையைச் சேர்ந்த செயங்கொண்டான் வெண்பாவில் நூல் புனைந்திருப்பது பெரும் நம்பிக்கையளிக்கிறது. தமிழும் தமிழ் யாப்பிலக்கணக்கங்களும் நாளும் நாளும் நற்பெறும் இலக்கியங்களாகப் புத்தெழுச்சி பெறும் என நம்பிக்கையளிக்கிறது.
இந்நூலில் எந்த வெண்பா சிறந்தது எந்தப் பகுதி சிறந்தது என மதிப்பெண்யிடுவது எளிதல்ல, நூல் முழுதுமே தேனமுது தான். எனினும் ஏதேனும் ஒன்றைச் சுட்ட வேண்டுமெனில், என் நெஞ்சைத் தொட்ட நூற்பயனைத் தான் சொல்ல வேண்டும். ஆம் செயங்கொண்டான் இந்நூலிற்கு நூற் பயனும் சொல்கிறார். என்ன பயன்? அழகப்பரின் வாழ்க்கையைப் படித்தவர்கள் தவறே செய்ய முடியாது எனத் திண்ணமாக உரைக்கிறார் திருக்குறளில் தோய்ந்த செயங்கொண்டான்.
அவர் பண்பை அறிந்தவர்கள் என்றும்
தவறுகள் செய்யத் தரியார் -- அவனியும்
மாற்றார் தனையும் மதிக்கின்ற பண்புதான்
ஊற்றத்தைக் கொடுத்த துணர்
வள்ளல் அழகப்பர் புகழ் மென்மேலும் ஓங்குக! வாழிய வாழிய செயங்கொண்டான்!!
நலந்தா செம்புலிங்கம்