திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்.
நகரத்தார்களிடையே தம் பெயருக்கு முன் ஏழு தலைமுறை முன்னோர் பெயர்களின் முதல் எழுத்தையோ முதல் இரண்டு எழுத்துக்களையோ வரிசையாக எழுதும் வழக்கம் உண்டு. இன்று அந்த ஏழு தலைமுறை முன்னேழுத்துக்களை எழுதும் பழக்கம் சற்று குறைந்திருந்தாலும் நல்ல வேளையாக நம்மில் பலர் நம் ஏழு தலைமுறை முன்னோர்களின் பெயர்கள் அறிந்திருக்கிறோம்.
இன்று ஒரு இளைஞனும் இளைஞியும் திருமணப் பந்ததத்தில் இணையும் போது அந்த மணமக்களின் இரு தரப்பு ஏழு தலைமுறை முன்னோர்களுக்கும் உறவு ஏற்படுகிறது. அந்த மணமக்களுக்கு பிறகும் அவர்களின் ஏழுழெழு தலைமுறை வழித்தோன்றல்களுக்கும் உறவு தொடர்கிறது. அதனால் தான் திருமணம் ஆயிரம் காலத்து பயிர் எனப்படுகிறது.
இந்த ஆயிரங்காலத்துப் பயிர் தாத்பரியத்தை நன்கு உணர்ந்த சமூகம் நகரத்தார் சமூகம். அதன்
வெளிப்பாடு தான் ஏழு தலைமுறை முன்னெழுத்து (Seven Generation Initial)
எழுதும் பழக்கம்.
அத்தகைய செட்டிநாட்டு ஆயிரம்
காலத்துப் பயிர் ஒன்று அண்மையில் பிலவ வருடம் ஆனி மாதம் 2ந் தேதி (16.06.2021) புதன்கிழமை அன்று ஆஸ்திரேலியாவில் மலர்ந்துள்ளது.
தேவகோட்டையில் இலுப்பைக்குடி கோவிலைச் சேர்ந்த கா.ப.வெ.லெ.அழ.லெ
நாகப்பச் செட்டியாரின் பேரனும் சரவணன் செட்டியாரின் மகனுமான அஷ்வின் விக்னேஷ் என்ற
சொர்ண லெட்சுமணன் தனது பட்ட மேற்படிப்பை ஆஸ்திரேலிய பல்கலைக் கழகத்தில் 2019 இல்
படிப்பை முடித்து விட்டு Citrus Ad பன்னாட்டு நிறுவனத்தில்
பணியாற்றி வருகிறார்.
அரிமளத்தில் நேமம் கோவிலைச் சேர்ந்த ப.ராம.ப.ராம. சுப்பிரமணியன் செட்டியார்
பேத்தியும் சுப.ராமசாமி செட்டியார் மகளுமான உமையாள் 2019ம்
ஆண்டு Ph.D ஆய்வுப் படிப்பிற்காக ஆஸ்திரேலியாவில் Sunshine Coast பல்கலைக்
கழகத்தில் சேர்ந்தார். .
உமையாளின் பெற்றோரும்
ஆஸ்திரேலியாவில் குடியேறியவர்கள். அஷ்வினின் பெற்றோர் இந்தியாவில்
உள்ளனர், அஷ்வினின் தாய் மாமன் சரவணன் பழனியப்பன் தன்
மனைவி மக்களோடு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகிறார்.
திருமண ஏற்பாடுகளை தொடர்ந்து மேற்கொள்ளவும் மாப்பிள்ளை வீட்டிற்கு பெண் காட்டவும் முகூர்த்த புடவை எடுக்கவும் உமையாளும் பெற்றோரும் இந்தியா வர மார்ச் 2020 ல் ஏற்பாடுகள் மேற்கொண்ட நிலையில் கொரோனா லாக்டௌன் மற்றும் உமையாள் படிப்பை கருத்தில் கொண்டு உமையாளை நிறுத்திவிட்டு பெற்றோர் மட்டும் இந்தியா வந்து சேர்ந்தனர்..
இதற்கிடையில் கொரனோ பேரிடர்
உலகத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் நடக்கும் ஒவ்வொரு அசைவிலும் அதன் தாக்கத்தை
ஏற்படுத்தியது.
போக்கு வரத்து
கட்டுப்பாடுகள் மேலும் அதிகமாயின உரிய தேதியில் மணமக்கள் இந்தியா வந்து சேர
முடியாத நிலை ஏற்பட்டது.
உமையாள் அஷ்வின் திருமணம் ஒத்தி
வைக்கப்பட்டது. மீண்டும் மீண்டும் போக்குவரத்துக்
கட்டுபாடுகள் அதிகரிக்க அதிகரிக்க திருமணம் மீண்டும் ஒத்தி வைக்கப்படாமல் இருக்க வேண்டுமெனில் திருமணத்தை ஆஸ்திரேலியாவிலேயே நடத்த
வேண்டிய நிலை ஏற்பட்டது.
நகரத்தார் திருமணங்களை செட்டிநாட்டில்
நடத்துவது தான் மரபு என்றாலும் சிங்கப்பூர் மலேஷியா மற்றும் சில நாடுகளில் வாழும் சில நகரத்தார் குடும்பங்களின் திருமணங்கள்
அந்தந்த நாடுகளில் நடந்து கொண்டு தான் இருக்ககிறது. அந்தந்த மணமக்களுக்கெல்லாம் அவர்களின்
பெற்றோர்கள் அந்த நாடுகளில் இருந்திருப்பார்கள். தாய் மாமன், அத்தை போன்ற நெருங்கிய உறவினர்கள் வேறு
நாட்டிலோ தாய் நாட்டிலோ இருந்தாலும் திருமணச் சடங்குகளைச் செய்ய அந்த நாட்டிற்கு
வந்துவிடுவார்கள்.
உமையாள் அஷ்வின் திருமணத்திலோ ஒரு
புதிய சூழல் ஏற்பட்டிருந்தது.
அஷ்வினின் பெற்றோர் பாண்டிச்சேரியில் உள்ளனர் ஆயாள் ஐயா சென்னையில் உள்ளனர். அப்பத்தா வீட்டு ஐயா சென்னை பாண்டிச்சேரி என பிள்ளைகள் வீட்டில் உள்ளார்கள்.
உமையாளின் பெற்றோர்
ஆஸ்திரேலியாவிலேயே குடியிருந்தாலும் திருமண ஏற்பாடுகள் செய்வதற்காக இந்தியா
திரும்பிவிட்டார்கள். உமையாளின் தாய் மாமன் பெங்களூரில் உள்ளார்
போக்குவரத்து கட்டுபாடுகளால் இவர்கள் யாரும் ஆஸ்திரேலியா செல்ல முடியாத நிலை. மணமக்களுக்கு சடங்கு செய்ய வேண்டிய நெருங்கிய உறவுகளில் மணமகன் அஷ்வினின் தாய்மாமன் சரவணன் மற்றும் பங்காளி செல்வமுத்துக்குமார் குடும்பத்தினர் மட்டும் தான் ஆஸ்திரேலியாவில் இருந்தனர் மற்ற உறவினர்கள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்தனர்.
பெற்றோரின் ஆசீர்வாதத்துடன்
முகூர்த்த புடவை மாப்பிள்ளை டிரஸ் மஞ்சள் கயிறு கோயில் பிரசாதம் ஆகியவை
இந்தியாவிலிருந்தும் தாலிச்சங்கிலி, மெட்டி ஆகியவற்றை உமையாள் உறவினர்
சிங்கப்பூரிலிருந்தும் அனுப்பினார்கள்.
நகரத்தார்களின் சிறப்பு அம்சம்
பழைமையை போற்றுவதோடு புதுமைகளையும் தங்கள் மரபுகளுக்கு ஒத்த வகையில் ஏற்றுக்
கொள்வது தான் என்பார்கள் சமூக மானிடவியல் அறிஞர்கள். அதனால் தான் நமது பழக்க வழக்கங்களைக் கடை பிடித்தவாறே கடல்
கடந்து பல நாடுகளில் வணிகம் செய்ய முடிந்தது, சர்வ தேச வங்கிப் பரிவர்த்தனைகளுக்கும் வங்கித் தொழிலிற்கும் முன்னோடியாகத் திகழ முடிந்தது. அந்த அடிச்சுவட்டில் ஆஸ்திரேலியா வாழ் நகரத்தார்கள் அஷ்வின்
உமையாள் திருமணத்தை செட்டிநாட்டு மரபுப்படி ஆஸ்திரேலியாவில் செய்ய தன்னெழுச்சியாக
மகிழ்ச்சியாக முடிவு செய்தனர்.
அஷ்வின் உமையாள் திருமணம் பிரிஸ்பேன் நகரில் உள்ள அருள்மிகு செல்வ விநாயகர் கோவிலில் 16.06.2021ம் நாளில் மிகச்
சிறப்பாக நடைபெற்றது. உறவினர்கள் கடல் கடந்து இருந்தாலும். எந்தந்த சடங்கை எவர் செய்ய வேண்டுமோ அந்தந்த
சடங்கை அவருடைய கோவிலைச் சார்ந்த ஒருவர் செய்தார்.
வெளியூரிலிருக்கும் சகோதரிகளுக்கு பொங்கல் பானைப் பணத்தை மணியாடர்
மூலமோ வங்கி மூலமோ அனுப்பும் பழக்கம் வருவதற்கு
முன்பு அந்த ஊரிலிருக்கம் பங்காளியைத் தான் கொடுக்கச் சொல்வார்கள். திருமணங்களில் மிக முக்கிய நிகழ்வான தேங்காய் சட்டியைக்
கொண்டு போகும் பொறுப்பு அந்த வீட்டுப் பெரியவரிடம் கொடுக்கப்படும்.
அந்த நெறியில் மணப்பெண்ணின் ஆயாள்
வீடு வயிரவன் கோவில். அக்கோவிலைச் சேர்ந்தவர் இடுப்பில்
பட்டுக் கட்டி மாமச் சடங்கு செய்தார். மணமகன் இலுப்பைக்குடி கோவில். இலுப்பைக்குடி கோவிலைச் சேர்ந்த பெண்மணி மாமியார் சடங்கு
செய்தார். இலுப்பைக்குடியில் பிறந்த பெண்மணி
நாத்தினார் சடங்கு செய்தார்.
இவற்றோடு செட்டிநாட்டிலேயே திருமணம்
நடந்ததைப் போலவே சீர் கொடுத்தல், வேவு இறக்குதல், காய்ச்சி ஊற்றுதல்
எல்லாவற்றையும் தன்னெழுச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் ஆஸ்ரேலிய நகரத்தார் அஷ்வின்
உமையாள் இணையருக்கு செய்து கொடுத்திருக்கிறார்கள்.
மரபு வழியில் நடந்த இந்தத் திருமணத்திற்கு நவீன தொழில் நுட்பத்தில் YOU TUBE நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்தது. உலகெங்கிருந்தும் நகரத்தார்கள் வாழ்த்தினார்கள்.
இந்த மங்கல நிகழ்ச்சி ஆஸ்திரேலிய
அரசின் கண்ணிலும் பட்டிருக்கிறது. ஆஸ்திரேலிய அரசு தங்கள் மண்ணில்
இத்தகைய மரபு சார் திருமணத்தை நடத்தப் பெற்றதை பெருமிதமாகக் கருதி மகிழ்ச்சி
தெரிவித்துள்ளது.
இந்தத் திருமணம் நகரத்தார் இளைஞர்
சமூகத்தினரிடையே ஒரு நல்விதையை விதைத்துள்ளது. நம் மரபுகளின் மேன்மையையும் அவசியத்தையும்
ஏட்டுச் சுரக்காய் ஆக அல்லாமல் கூட்டுக்காயாக பரிமாறப்பட்டுள்ளது.
வாழ்க அஷ்வின் உமையாள் இணையர்!
வாழிய ஆஸ்திரேலிய நகரத்தார்!!
-- நலந்தா
செம்புலிங்கம்
06.07.2021