Friday, 12 November 2021

 வெண்பாவில் தொடுத்த அந்தாதி மாலை

                                                                                                   
(திருக்குறள் தேனீ செயம்கொண்டான் எழுதிய அழகப்பர் அந்தாதி நூலிற்கு எனது அறிமுகவுரை)                                            

                நாள் தோறும் திருக்குறளைப் படித்துத்  துயித்துப் பரப்புவதையே தன் வாழ்க்கையாக வரித்துக் கொண்டவர் தம்பி  செயங்கொண்டான்.




           இவர், ஆயிரமாயிரம் மாணவர் நெஞ்சங்களில் திருக்குறளை நாளும் விதைத்து வரும் நல்லாசிரியர்.  இவர் திருக்குறளின் பால் எவ்வளவு ஈடுபாடு கொண்டுள்ளாரோ அதே அளவு வள்ளல் அழகப்பர் மீதும் ஈடுபாடு கொண்டவர்.

             கொடை விளக்கெனக் வ.சுப. மாணிக்னாரால் பாடப்பெற்ற வள்ளல் அழகப்பர் 1909 ஆண்டு தோன்றி 1957 ஆண்டு புகழுடம்பெய்தியவர்.  இந்நூலாசிரியர் செயங்கொண்டான் வள்ளல் அழகப்பர் மறைந்த பிறகு பிறந்த இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்தவர், இவர் அழகப்பரை நேரில் கண்ட தலைமுறையினரைப் போல புலமை உரிமை (POETIC LICENCE) எடுத்துப் பாடுகிறார்.

                        யாம் மெய்யாக் கண்டவற்று ளில்லை எனுமளவு
                        நாம்மெய்யாய் கண்டிட்ட நல்லவரைப் -- பாவடியில்
                       பாடுகின்ற போதின்பம் பாடுபுகழ் பெற்றிங்கே
                        ஊடாடும் அன்னார் ஒளி
                                                                                                            (வெண்பா 13)

                     அழகப்பரை காரைக்குடியைக் கல்விக்குடியாக்கிய வள்ளல் எனக்கொண்டாடுவது பெருவழக்காகவுள்ளது.  உண்மையில் அவருடைய கொடைப் பரப்போ காரைக்குடிக்கு அப்பாற்பட்டு  மொழி  மாநில தேசிய எல்லைகளைக் கடந்து விரிந்துள்ளது.  இன்று அண்ணா பல்கலைக் கழகத்தின் முதன்மைக் கல்லூரியாக விளங்கும் அழகப்பா பொறியியற் கல்லூரியும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் பொறியியற் கல்லூரியும் 1943 -44 ஆண்டுகளில் அழகப்பரின் அளித்த கொடையாகும்..  உள்ளபடியை அந்த வள்ளலின் கடைக்கண் பார்வை காரைக்குடிக்கு 1947 ஆம் ஆண்டில் தான் கிடைத்தது.


                      உண்மையான ஒரு மாமனிதன் தான் உண்மையான ஒரு புலவனின் பாடுபொருளாக முடியும்.  புலவனுக்குத் தன் பாட்டுடைத் தலைவனைப் புகழந்தேத்துவது தான் இயல்பு. அத்தோடு வாசகனுக்கு ஒரு நோக்கத்தையும் செய்தியையும் சொன்னால் தான் புலவனும் பாட்டும் நிலைக்கும்.  இந்நூலாசிரியர் செயங்கொண்டான் வள்ளல் அழகப்பரின் வாழ்க்கையை நாம் ஏன் படிக்க வேண்டுமென்பதற்கு ஒரு காரணத்தையும் மிக மிகத் தெளிவாகச் சுட்டுகிறார்.

                          வலக்கை கொடுக்க வருமிடக்கை காணா
                          நலக்கொடையாய் வீடதனை நல்கும் -- அழகப்பர்
                         செல்வப் பயன்கண்டார் சீர்பெற்றார் தம்வாழ்வை
                         எல்லையாய் கொள்வோம் இனி
                                                                                                      (வெண்பா 10)
              வள்ளல் அழகப்பர் வெள்ளிக் கரண்டியுடன் பிறந்தவர் (born with a silver spoon) எனக் கூறத்தக்க வகையில் செல்வச் செழிப்புடன் பிறந்தவர்.   அவர் தம் கூர்த்தமதியினால் அச்செல்வத்தை மேலும் பெருக்கினார்.  அவருடைய கொடை வேகத்திற்கு ஈடுகொடுக்க அவரே  மேலும் மேலும் உழைத்து ஈட்டி ஈந்து மகிழந்தார்.  அவருடைய தனி வாழ்க்கையில் பல சோகங்களையும் எதிர்கொண்டார். தொழில் துறையிலும் பல போட்டி பொறமைகளையும் எதிர்கொண்டார். தொழிலிலும்  பல சவால்களைச் சந்தித்தார்.  தான் படும் துயரங்களைக் கண்டு தளாரது உழைத்து ஈட்டி கொடுது்து மகிழந்தார். இதனை நூலாசிரியர் 66 வது வெண்பாவில் மிக மிக அழகாகப் பதிவு செய்துள்ளார்.

                            தாம்பட்ட இன்னலைக் கண்டு தளராது 
                            நாம்யார்க்கும் கல்வியினை நல்காக்கால் -- வேம்பென
                            வாழ்வு கசக்கும் வகைகூடாதென்றுழைத்தார்
                             ஆழ்கடல்சூழ் பாரில் அவர்

                                                                           (வெண்பா 66)

                    இந்நூல் யாப்பு இலக்கணங்களில் தேர்ச்சி மிக்கவர்கள் இயற்றக் கூடிய வெண்பா யாப்பில் பூத்து அந்தாதி மாலையாக வள்ளல் அழகப்பருக்கு சூடப்பட்டுள்ளது.  இதை இயற்றியவர் யாப்பு இலக்கணங்கள் மீறிப் பீரிட்ட புதுக் கவிதை இயக்கமான வானம்பாடி இயக்கத்திற்கும் பின் பிறந்தவர்.  வானம்பாடி இயக்கத்திற்கு பின்னர் தோன்றிய ஹைக் கூ தலைமுறையைச் சேர்ந்த செயங்கொண்டான் வெண்பாவில் நூல் புனைந்திருப்பது பெரும் நம்பிக்கையளிக்கிறது.  தமிழும்  தமிழ் யாப்பிலக்கணக்கங்களும் நாளும் நாளும் நற்பெறும் இலக்கியங்களாகப் புத்தெழுச்சி பெறும் என நம்பிக்கையளிக்கிறது.

                     இந்நூலில் எந்த வெண்பா சிறந்தது எந்தப் பகுதி சிறந்தது என மதிப்பெண்யிடுவது எளிதல்ல, நூல் முழுதுமே தேனமுது தான்.  எனினும் ஏதேனும் ஒன்றைச் சுட்ட வேண்டுமெனில், என் நெஞ்சைத் தொட்ட நூற்பயனைத் தான் சொல்ல வேண்டும்.  ஆம் செயங்கொண்டான் இந்நூலிற்கு நூற் பயனும் சொல்கிறார். என்ன பயன்? அழகப்பரின் வாழ்க்கையைப் படித்தவர்கள் தவறே செய்ய முடியாது எனத் திண்ணமாக உரைக்கிறார் திருக்குறளில் தோய்ந்த செயங்கொண்டான்.

                       அவர் பண்பை அறிந்தவர்கள் என்றும்
                       தவறுகள் செய்யத் தரியார் --  அவனியும்
                      மாற்றார் தனையும் மதிக்கின்ற பண்புதான்
                      ஊற்றத்தைக் கொடுத்த துணர்

வள்ளல் அழகப்பர் புகழ் மென்மேலும் ஓங்குக!  வாழிய வாழிய செயங்கொண்டான்!!

நலந்தா செம்புலிங்கம்

Tuesday, 6 July 2021

ஆயிரம் காலத்துப் பயிர்: செட்டிநாட்டு நாற்று!ஆஸ்திரேலியாவில் நடவு!!



திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்.

          நகரத்தார்களிடையே தம் பெயருக்கு முன்  ஏழு தலைமுறை முன்னோர் பெயர்களின் முதல் எழுத்தையோ முதல் இரண்டு எழுத்துக்களையோ வரிசையாக எழுதும் வழக்கம் உண்டு.  இன்று அந்த ஏழு தலைமுறை முன்னேழுத்துக்களை எழுதும் பழக்கம் சற்று குறைந்திருந்தாலும் நல்ல வேளையாக நம்மில் பலர்  நம் ஏழு தலைமுறை முன்னோர்களின் பெயர்கள் அறிந்திருக்கிறோம்.

          இன்று ஒரு இளைஞனும் இளைஞியும் திருமணப் பந்ததத்தில் இணையும் போது அந்த மணமக்களின் இரு தரப்பு ஏழு தலைமுறை முன்னோர்களுக்கும் உறவு ஏற்படுகிறது.  அந்த மணமக்களுக்கு பிறகும்  அவர்களின் ஏழுழெழு தலைமுறை வழித்தோன்றல்களுக்கும் உறவு தொடர்கிறது. அதனால் தான் திருமணம் ஆயிரம் காலத்து பயிர் எனப்படுகிறது.

         இந்த ஆயிரங்காலத்துப் பயிர் தாத்பரியத்தை நன்கு உணர்ந்த சமூகம் நகரத்தார் சமூகம். அதன் வெளிப்பாடு தான் ஏழு தலைமுறை முன்னெழுத்து (Seven Generation Initial) எழுதும் பழக்கம்.

        அத்தகைய செட்டிநாட்டு ஆயிரம் காலத்துப் பயிர் ஒன்று அண்மையில் பிலவ வருடம்  ஆனி மாதம் 2ந் தேதி (16.06.2021) புதன்கிழமை  அன்று ஆஸ்திரேலியாவில் மலர்ந்துள்ளது.

               தேவகோட்டையில் இலுப்பைக்குடி கோவிலைச் சேர்ந்த கா.ப.வெ.லெ.அழ.லெ நாகப்பச் செட்டியாரின் பேரனும் சரவணன் செட்டியாரின் மகனுமான அஷ்வின் விக்னேஷ் என்ற சொர்ண லெட்சுமணன் தனது பட்ட மேற்படிப்பை ஆஸ்திரேலிய பல்கலைக் கழகத்தில் 2019 இல் படிப்பை முடித்து விட்டு  Citrus Ad பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

         அரிமளத்தில் நேமம்  கோவிலைச் சேர்ந்த ப.ராம.ப.ராம. சுப்பிரமணியன் செட்டியார் பேத்தியும் சுப.ராமசாமி செட்டியார் மகளுமான உமையாள் 2019ம் ஆண்டு Ph.D  ஆய்வுப் படிப்பிற்காக ஆஸ்திரேலியாவில்  Sunshine Coast பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். .

            உமையாளின் பெற்றோரும் ஆஸ்திரேலியாவில் குடியேறியவர்கள்.  அஷ்வினின் பெற்றோர் இந்தியாவில் உள்ளனர், அஷ்வினின் தாய் மாமன் சரவணன் பழனியப்பன்  தன் மனைவி மக்களோடு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகிறார்.

       திருமண ஏற்பாடுகளை தொடர்ந்து மேற்கொள்ளவும் மாப்பிள்ளை வீட்டிற்கு பெண் காட்டவும் முகூர்த்த புடவை எடுக்கவும் உமையாளும் பெற்றோரும் இந்தியா வர மார்ச் 2020 ல் ஏற்பாடுகள் மேற்கொண்ட நிலையில் கொரோனா லாக்டௌன் மற்றும் உமையாள் படிப்பை கருத்தில் கொண்டு உமையாளை நிறுத்திவிட்டு பெற்றோர் மட்டும் இந்தியா வந்து சேர்ந்தனர்..



          இதற்கிடையில் கொரனோ பேரிடர் உலகத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் நடக்கும் ஒவ்வொரு அசைவிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தியது.

        போக்கு வரத்து கட்டுப்பாடுகள் மேலும் அதிகமாயின உரிய தேதியில் மணமக்கள் இந்தியா வந்து சேர முடியாத நிலை ஏற்பட்டது.

       உமையாள் அஷ்வின் திருமணம் ஒத்தி வைக்கப்பட்டது.  மீண்டும் மீண்டும் போக்குவரத்துக் கட்டுபாடுகள் அதிகரிக்க அதிகரிக்க திருமணம் மீண்டும் ஒத்தி  வைக்கப்படாமல் இருக்க வேண்டுமெனில்  திருமணத்தை ஆஸ்திரேலியாவிலேயே நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.  

         நகரத்தார் திருமணங்களை செட்டிநாட்டில் நடத்துவது தான் மரபு என்றாலும்   சிங்கப்பூர் மலேஷியா மற்றும் சில நாடுகளில் வாழும் சில நகரத்தார் குடும்பங்களின் திருமணங்கள் அந்தந்த நாடுகளில் நடந்து கொண்டு தான் இருக்ககிறது.  அந்தந்த மணமக்களுக்கெல்லாம் அவர்களின் பெற்றோர்கள்  அந்த நாடுகளில் இருந்திருப்பார்கள்.  தாய் மாமன், அத்தை போன்ற நெருங்கிய உறவினர்கள் வேறு நாட்டிலோ தாய் நாட்டிலோ இருந்தாலும் திருமணச் சடங்குகளைச் செய்ய அந்த நாட்டிற்கு வந்துவிடுவார்கள்.

          உமையாள் அஷ்வின் திருமணத்திலோ ஒரு புதிய சூழல் ஏற்பட்டிருந்தது.

        அஷ்வினின் பெற்றோர் பாண்டிச்சேரியில் உள்ளனர் ஆயாள் ஐயா  சென்னையில் உள்ளனர்.  அப்பத்தா வீட்டு ஐயா  சென்னை பாண்டிச்சேரி என பிள்ளைகள் வீட்டில் உள்ளார்கள்.

         உமையாளின் பெற்றோர் ஆஸ்திரேலியாவிலேயே குடியிருந்தாலும் திருமண ஏற்பாடுகள் செய்வதற்காக இந்தியா திரும்பிவிட்டார்கள்.  உமையாளின் தாய் மாமன்  பெங்களூரில்  உள்ளார்

        போக்குவரத்து கட்டுபாடுகளால் இவர்கள் யாரும் ஆஸ்திரேலியா செல்ல முடியாத நிலை. மணமக்களுக்கு  சடங்கு செய்ய வேண்டிய நெருங்கிய உறவுகளில் மணமகன் அஷ்வினின் தாய்மாமன் சரவணன் மற்றும் பங்காளி செல்வமுத்துக்குமார் குடும்பத்தினர் மட்டும் தான் ஆஸ்திரேலியாவில் இருந்தனர் மற்ற உறவினர்கள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்தனர்.


        பெற்றோரின் ஆசீர்வாதத்துடன் முகூர்த்த புடவை மாப்பிள்ளை டிரஸ் மஞ்சள் கயிறு கோயில் பிரசாதம் ஆகியவை இந்தியாவிலிருந்தும் தாலிச்சங்கிலி, மெட்டி ஆகியவற்றை உமையாள் உறவினர் சிங்கப்பூரிலிருந்தும் அனுப்பினார்கள்.

         நகரத்தார்களின் சிறப்பு அம்சம் பழைமையை போற்றுவதோடு புதுமைகளையும் தங்கள் மரபுகளுக்கு ஒத்த வகையில் ஏற்றுக் கொள்வது தான் என்பார்கள் சமூக மானிடவியல் அறிஞர்கள்.  அதனால் தான் நமது பழக்க வழக்கங்களைக் கடை பிடித்தவாறே கடல் கடந்து பல நாடுகளில் வணிகம் செய்ய முடிந்தது, சர்வ தேச வங்கிப் பரிவர்த்தனைகளுக்கும் வங்கித் தொழிலிற்கும் முன்னோடியாகத் திகழ முடிந்தது.  அந்த அடிச்சுவட்டில் ஆஸ்திரேலியா வாழ் நகரத்தார்கள் அஷ்வின் உமையாள் திருமணத்தை செட்டிநாட்டு மரபுப்படி ஆஸ்திரேலியாவில் செய்ய தன்னெழுச்சியாக மகிழ்ச்சியாக முடிவு செய்தனர்.

            அஷ்வின் உமையாள் திருமணம் பிரிஸ்பேன்  நகரில் உள்ள  அருள்மிகு செல்வ விநாயகர்  கோவிலில் 16.06.2021ம் நாளில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.  உறவினர்கள் கடல்  கடந்து இருந்தாலும். எந்தந்த சடங்கை எவர் செய்ய வேண்டுமோ அந்தந்த சடங்கை அவருடைய கோவிலைச் சார்ந்த ஒருவர் செய்தார்.

                   வெளியூரிலிருக்கும் சகோதரிகளுக்கு பொங்கல் பானைப் பணத்தை மணியாடர் மூலமோ வங்கி மூலமோ அனுப்பும் பழக்கம் வருவதற்கு  முன்பு அந்த ஊரிலிருக்கம் பங்காளியைத் தான் கொடுக்கச் சொல்வார்கள்.  திருமணங்களில் மிக முக்கிய நிகழ்வான தேங்காய் சட்டியைக் கொண்டு போகும் பொறுப்பு அந்த வீட்டுப் பெரியவரிடம் கொடுக்கப்படும்.

             அந்த நெறியில் மணப்பெண்ணின் ஆயாள் வீடு வயிரவன்  கோவில்.   அக்கோவிலைச் சேர்ந்தவர் இடுப்பில் பட்டுக் கட்டி மாமச் சடங்கு செய்தார்.  மணமகன் இலுப்பைக்குடி கோவில்.  இலுப்பைக்குடி கோவிலைச் சேர்ந்த பெண்மணி மாமியார் சடங்கு செய்தார்.  இலுப்பைக்குடியில் பிறந்த பெண்மணி நாத்தினார் சடங்கு செய்தார்.  

             இவற்றோடு செட்டிநாட்டிலேயே திருமணம் நடந்ததைப் போலவே சீர் கொடுத்தல், வேவு இறக்குதல், காய்ச்சி ஊற்றுதல் எல்லாவற்றையும் தன்னெழுச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் ஆஸ்ரேலிய நகரத்தார் அஷ்வின் உமையாள் இணையருக்கு செய்து கொடுத்திருக்கிறார்கள்.

         மரபு வழியில் நடந்த இந்தத் திருமணத்திற்கு நவீன தொழில் நுட்பத்தில் YOU TUBE நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்தது.  உலகெங்கிருந்தும் நகரத்தார்கள் வாழ்த்தினார்கள்.  



            இந்த மங்கல நிகழ்ச்சி ஆஸ்திரேலிய அரசின் கண்ணிலும் பட்டிருக்கிறது.  ஆஸ்திரேலிய அரசு தங்கள் மண்ணில் இத்தகைய மரபு சார் திருமணத்தை நடத்தப் பெற்றதை பெருமிதமாகக் கருதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

             இந்தத் திருமணம் நகரத்தார் இளைஞர் சமூகத்தினரிடையே ஒரு நல்விதையை விதைத்துள்ளது.  நம் மரபுகளின் மேன்மையையும் அவசியத்தையும் ஏட்டுச் சுரக்காய் ஆக அல்லாமல் கூட்டுக்காயாக பரிமாறப்பட்டுள்ளது.

               வாழ்க அஷ்வின் உமையாள் இணையர்!

               வாழிய ஆஸ்திரேலிய நகரத்தார்!!

 

-- நலந்தா செம்புலிங்கம்

06.07.2021