^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
பிள்ளையார் நோன்பு நகரத்தார்களின் தொல்மரபு!
நகரவிடுதிகளில் நகரத்தார் சங்கங்களில் இழை எடுத்துக் கொள்வது புது மரபு!!
பிள்ளையார் நோன்பு இழையை வீட்டில் எடுத்துக் கொள்வது தான் அதன் நோக்கத்திற்குப் பொருத்தமாக இருக்கும். ஆனால் காலத்தின் கட்டாயத்தால் நாம் சங்கங்களில் இழை எடுத்துக் கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது. மேலும் சங்கங்களில் இழை எடுத்துக் கொள்வது சங்கங்களுக்குப் புத்துயிரும் அளித்தது.
ஒரு புது மரபு வழக்கில் இருக்கிற தொல்மரபை கொஞ்சம் நீர்த்துவிடும், உண்மை தான் ஆனால் தவிர்க்க முடியாது. இது தொல் மரபை நீர்க்கச் செய்தாலும் அதிலும் ஒரு நன்மை விளைகிறது. அதனால் தான் நகரவிடுதிகளில் நகரத்தார் சங்கங்களில் இழை எடுத்துக் கொள்வதற்கும் அதற்கு ஏற்பாடு செய்வதற்கும் வரவேற்பு பெருகிவருகிறது.
புது மரபோடு தொல்மரபையும் மாபெரும் பண்பாட்டுப் பணியை சென்னையில் ஆரவராமின்றி ஆறு நல்லுள்ளங்கள் ஆறு ஆண்டுகளாக செய்து வருகிறார்கள்.
சென்னையில் உள்ள நகரத்தார்கள் அனைவரும் தத்தம் வீடுகளில் பிள்ளையார் நோன்பு இழை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது இவர்களின் லட்சியம்.
ஆனால் இயந்திர கதியான சென்னை வாழ்க்கையில் பல வீடுகளில் கணவன் மனைவி இருவரும் பணிக்குச் செல்லும் சூழலில் பிள்ளையார் நோன்பிற்கு வீட்டில் இழை எடுத்துக் கொள்ள விரும்புகிறவர்களையும் நகரவிடுதிகள் நகரத்தார் சங்கங்களில் இழை எடுத்துக் கொள்ள வைப்பது நடைமுறை சிக்கல்கள் தான். இழை மாவு சேர்த்தல் எளிதல்ல, இழை நூலும் பொரிகளும் எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை.
இந்த நடைமுறைச் சிக்கலுக்கு தேவகோட்டையைச் சேர்ந்தவரும் சென்னை மகாலிங்கபுரத்தில் லெட்சுமி மெடிக்கல்ஸ் நடத்திவருபவருமான திரு R.V. தண்ணீர்மலை செட்டியார் தீர்வு காண விழைந்தார்.
அந்த நடைமுறைச் சிக்கலுக்கு, பிள்ளையார் நோன்பிற்கு இன்றியமையாதவையாகிய இழை நூல், இழைமாவு, பொரி வகைகள் மற்றும் கோலக் கூடு ஆகிய பிள்ளையார் நோன்புப் பொருட்களைப் பாக்கெட் போட்டு இலவசமாகக் கொடுப்பது தான் ஒரே தீர்வு என்றும் தெளிந்தார்.
பிள்ளையார் நோன்பிற்கு இன்றியமையாத இப்பொருட்களை சென்னையில் நகரத்தார்களுக்கு இலவசமாகக் கொடுக்க வேண்டும் என்ற தீர்விற்கு செயல் வடிவம் கொடுக்கும் பணியில் திரு தண்ணீர்மலை செட்டியாருக்கு
.SP. முத்துக்குமார் (Zonal Manager, Channel & Retail Finance, Mahindra & Mahindra --- S.S.S வீடு, தேவகாேட்டை)
V. உடையப்பன் (Muthu Lakshmi Strores, Chennai --- உதயாச்சியார் வீடு, தேவகோட்டை)
K. சீதாராமன் (Swathi Agencies & Skandha Guru Chit funds --- உதயாச்சியார் வீடு, தேவகோட்டை)
கதி. கார்த்திக் (Valli Entrerprises, Chennai -- கிழவன் செட்டியார் வீடு, தேவகோட்டை)
ராதா நாகப்பன் (Nagappa Pharmacy. Chennai -- கூலிக்கார வீடு, தேவகோட்டை)
ஆகியோர் துணை நிற்கிறார்கள். இக்குழுவினர் 2015 முதல் சென்னை வாழ் நகரத்தார்களுக்கு பிள்ளையார் நோன்புப் பொருட்கள் வழங்கிவருகிறார்கள். 2017 ஆம் ஆண்டில் இருமுறை வழங்கியதால், இந்த 2020 ஆண்டில் கோவிட் கட்டுபாடுகளுக்கிடையில் ஆறாம் முறையாக இப்பணியை மேற்கொள்கிறார்கள்.
இந்த ஆண்டு இன்று வரை பதிவு செய்துள்ள 1100 (ஆயிரத்து நூறு)க்கும் அதிமான குடும்பத்தினருக்கும் பிள்ளையார் நோன்பு பொருள்களை இலவசமாக குறித்த இடங்களில் குறித்த இடங்களில் வழங்கவுள்ளனர்.
ஒரு விளக்கு ஆயிரம் விளக்குகளை ஏற்றும். பிள்ளையார் நோன்பு எனும் தொல்மரபிற்குப் புத்துயிரூட்டும் இந்த அறுவர் குழுவின் பணி அத்தகைய திருவிளக்கேற்றும் பணி ஆயிரம் விளக்குளை ஏற்றும் திருப்பணி தான்.
நம் குலம் காக்கும் திருமுருகனைப் பேணி வளர்த்த ஆறு கார்த்திகைப் பெண்களைப் போல நம் குலம் பெருக பிள்ளையார் நோன்பை வீடுகளில் கொண்டாடும் தொல்மரபிற்குப் புத்துயிரூட்டும் ஆறு கார்த்திகைச் செல்வர்கள் வாழிய! வாழிய!!
வாசகர்கள் இப்பதிவோடு தொடர்பு என்னுடைய சென்ற ஆண்டு பதிவையும் வாசிக்க வேண்டுகிறேன்.
https://nalanthaa.blogspot.com/2019/12/blog-post_25.html
நலந்தா செம்புலிங்கம்
18.12.2020